Thursday, August 30, 2012

முதல் மரியாதை


பத்தாவது முறையாக முதல் மரியாதை திரைப்படத்தைப் பார்த்தேன். அற்புதமான ஒரு காதல் காவியம்.. அன்புக்கு ஏங்குகின்ற ஒரு ஜீவனின் துடிப்பை துல்லியமாக காட்டியிருக்கும் படம்.
  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அன்பிற்கான ஏக்கம், காதலுக்கான தவிப்பு, ஒரு தாய்மையின் அணைப்புக்கும் மயிர் கோதும் விரல்களுக்குமான தேடல் இருந்துகொண்டுதானிருக்கிறது. ஒரு சிலருக்கு அன்பும் அரவணைப்பும் இயல்பாகவே கிடைத்துவிடுகிறது. பலருக்கு வாழ்க்கை முழுக்கக் கிடைக்காமலே போய்விடுகிறது.
  தோப்பின் நடுவே சிம்னி விளக்கெரியும் ஒற்றைக் குடிசைக்கு வெளியே நிலவொளியில் மனைவியின் மடியில் கணவன் தலைவைத்துப் படுத்திருக்க அவனது வயிற்றின் மேல் சாய்ந்து குழந்தை தூங்க நடுநிசிவரை கிண்டலும் கேலியுமாய் பேசி மகிழும் குடும்பத்தையும் பார்த்திருக்கிறேன். பணத்தின் பின்னால் ஓடிவிட்டு நேரங்கெட்ட நேரத்தில் வந்து தானே சோற்றைஅள்ளிப் போட்டுத் தின்றுவிட்டு தனியறையில் படுத்துறங்கி பொழுது புலருமுன் குடும்பத்தின் முகத்திலேயே விழிக்காமல் மீண்டும் பணத்தின் பின் ஓடும் மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.
 இங்கே பணம் மிகுந்திருக்கிறது. அங்கே சந்தோசம் மிகுந்திருக்கிறது. பணத்தைக் கொடுத்து சந்தோசத்தை வாங்கமுடியும் என்ற எண்ணம் எல்லாக்காலங்களிலும் இருந்திருக்கிறது. இப்போது அதிகமாக வளர்ந்திருக்கிறது. அது என்றுமே சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அந்தப் பணத்தைக் கொண்டு அன்பு காட்டுவது போல் நடிப்பவர்களை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம். அன்பை வாங்கமுடியாது. உங்களைக் கண்டவுடன் சந்தோசப் படுவது போல் நடிப்பவர்களை வாங்கலாம். சந்தோசத்தை வாங்கமுடியாது.
 முதல்மரியாதை படத்தில் நடிப்புக்கான களம்தான் என்றாலும் அங்கே யாரும் நடிக்கவில்லை. நம்முள் ஒருவராக வாழ்ந்திருக்கிறார்கள். மற்ற படங்களிலெல்லாம் காதல் என்ற பெயரில் காமம் மட்டுமே சொல்லப்படுகிறது. அழகிய பெண்ணைப் பார்த்து அழகிய ஆண் விரும்புகிறான் காதலிக்கவில்லை. ஆனால் இது காதலைச் சொன்ன படம். இப்போது இதுமாதிரிப் படைப்புகளை பாரதிராஜாவிடமே எதிர் பார்க்கமுடியாது என்பதுதான் நிதர்சனம். மீண்டும் சந்திப்போம்.
 

No comments:

Post a Comment