Wednesday, June 6, 2012

இறைவன் இருக்கின்றானா?


   எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரில் ஒரு பாழடைந்த பெருமாள்கோவில் ஒன்று இருந்தது. கோவில்தான் பழையது ஆனால் பூஜைகள் காலக்கிரமப்படி நடந்து கொண்டுதானிருந்தது. அந்தப் பூஜைக்கு எங்கள் வீட்டிலிருந்து தேவையான பொருளும் பணமும் கொடுத்து வருவது வழக்கம்.
  ஒருநாள் பூசாரி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் சொன்னார்"கவுண்டரே கோவிலில் அமுது அறை ஒன்றுகட்டிக் கொடுங்கள். பொங்கல் வைப்பதற்கு சிரமமாயிருக்கிறது" என்றார். நானும் சரி முக்கால்வாசிச் செலவை நான் செய்துகொள்கிறேன். கால்பங்கு செலவை அந்த ஊர்க்காரர்கள்தான் செய்யவேண்டும். அதனால் ஊர்க்கூட்டத்தைக் கூட்டுங்கள் என்றேன். கோவில் வளாகத்திலேயே கூடினோம். கூட்டத்தில் முன்னாள் கிராம நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டார். அவர்" கோவில் பாழடைந்து கிடக்கும்போது அமுதமடம் கட்டுவது வீண்வேலை முதலில் கோவில் கட்டும் வழியைப் பாருங்கள்."என்றார். சரி கோவிலை இடித்துக் கட்டுவது என்று முடிவெடுத்தோம்.. பிறகு ஒரு கோவில் கட்டுமானத்தைப் பற்றித் தெரிந்த அறிஞர் ஒருவரை அழைத்துவந்து காட்டினோம். அவர் இந்த இடத்தில் ஆவுடையார் (சிவலிங்கத்தின் கீழ்ப்பகுதி) மட்டும் இருக்கிறது லிங்கத்தைக் காண்வில்லை சிவன் கோவிலாக இருந்து பெருமாள்கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. என்று சொன்னார். நான் சரி சிவன் கோவிலாகவே கட்டிவிடலாம் என்று சொன்னேன். ஊர்மக்கள் தயங்கினார்கள். பெருமாள் கோவில் மட்டும்தான் கட்டமுடியும் சிவன் கோவில் கட்டுவதானால் அதிகம் செலவாகும் எங்களால் அவ்வளவு தொகை வசூல் செய்ய்முடியாது. என்று சொல்லிவிட்டார்கள்.
  நான் அவர்களிடம் பேசி சிவன் கோவில் கட்டுவதற்கு மற்ற ஊர்க்காரர்களிடம் வசூல் செய்ய்துவிடலாம் என்ற நம்பிக்கையூட்டி சிவன் கோவிலாகவே கட்டிவிடலாம். நானும் ஒரு பெரிய தொகைக் கொடுக்கிறேன் என்று சொல்லி சம்மதிக்கச் செய்தேன். மேலும் சில பெருந்தனக்காரர்கள் உதவியுடன் சிவன் அம்பாள் பெருமாள் ஆக மூன்று சன்னிதிகளை அமைத்து கட்டுமானங்களை ஆரம்பித்தோம்.
     இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? பிரச்சனை கோவில் கட்டுவதில் இல்லை. எனக்குத்தான். அதுவரை அமைதியாக சென்று கொண்டிருந்த என் வாழ்வில் கோவில் வேலை ஆரம்பித்து மூன்று வாரங்களில் ஒரு லாரி மண்ணைக் கொண்டுவந்து என் தலைமீது கொட்டியது போல போலீஸ் ஸ்டேசன் கோர்ட் சிவில்வழக்கு அவமானம் என அனைத்தும் ஒன்றாய் வந்து சேர்ந்தது. சுமுகமாக இரண்டொரு வார்த்தைகளில் தீரவேண்டிய பிரச்சனைகள்கூட பூதாகரமாய் வெடித்தது. அதற்காக செலவளித்த பணத்தை வைத்துக் கோவிலைக் கட்டிமுடித்திருக்கலாம்.
     இதுதான் ஆண்டவன் கிருபையா? தனக்காக கோவில் கட்டுபவனைக் கூட நிம்மதியாகக் கட்டவிடாத அந்த ஆண்டவனை வாழ்க்கையில் நிம்மதியைக் கொடு என்று வேண்டுவது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா? ஆனந்தவிகடனில் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற நூலைப் படிக்கும் போது நினைப்பதுண்டு எல்லாம் வல்ல சோமநாதராலேயே தன்னுடைய கோவிலையும் தனது பக்தர்களையும் காப்பாற்ற முடியவில்லையா? என்று. மொகலாயர் ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்கள் எத்தனை? கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்கள் எவ்வளவு? அதே நிலைதானா எனக்கும்?
      என்னுடைய சந்தேகம் ஒன்றுதான். இறைவனைக் கும்பிடுவதா வேண்டாமா? இறைவன் என்று ஒன்று உண்டா இல்லையா? ஆண்டவனை செருப்பால் அடித்தவர்களுக்கு ஆட்சி அதிகாரம் பணம் புகழ். என அனைத்தையும் வாரி வழங்கிய ஆண்டவன் கோவில் கட்டுபவனுக்கு மட்டும் அவமானமும் அபகேடுகளும் பரிசாகக் கொடுப்பதேன்? சிலையைத் திருடுபவன் பஞ்சனையில் களித்திருக்க சிலைவடிப்பவன் தெருப்புழுதியில் கிடப்பதேன்? யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்.  

No comments:

Post a Comment