Sunday, October 20, 2019

வந்தார்கள் வென்றார்கள்

ஜுனியர் விகடனில் வெளியான கார்ட்டூனிஸ்ட் மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் என்ற தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்று புத்தகமாக வெளிவந்திருந்தது. அதை நான் தொடராக வெளிவந்த காலத்தில் படிக்க முடியவில்லை. ஒருமுறை புத்தகக் கடையில் பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே வந்தேன். வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் கண்ணில் பட்டது. அதைக் கையிலெடுத்துப் பிரித்தேன். முதல் அத்தியாயம் தைமூர். அதில் அச்சேறியிருந்த தைமூர் செங்கிஸ்கான் மற்றும் அலெக்சாண்டரின் படங்கள் ஆர்வத்தைத் தூண்ட மேலோட்டமாக முதல் அத்தியாயத்தை படித்தேன். எகிறிவிட்டது இதயம். எத்தனை கொடூரங்கள் அப்பொழுதே அந்த புத்தகத்தை வாங்கி வந்துவிட்டேன். முகமது கோரியில் ஆரம்பித்து நாதிர்ஷா வரை கொடூரங்களும் போர்களும் இடையிடையே காதலும் கலந்த வரலாற்று நிகழ்வுகள். தந்தை மகனைக் கொல்வதும் மகன் தகப்பனைக் கொடுமைப்படுத்துவதும் அண்ணன் தம்பிகளையும் அவர்கள் குடும்பத்தையே அடியோடு அழிப்பதும் தம்பி அண்ணன்களை வேரறுப்பதும். அப்ப்ப்ப்ப.... அரச போகம் இத்தனை அக்கிரமங்களுக்கு வழிவகுக்குமா? இதையெல்லாம் படிக்கும் போது நெஞ்சில் நிலவிடும் நிம்மதி என்ன தெரியுமா? தற்போது நாம் வாழும் காலம் இந்த வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. ஒரு கார்ட்டூனிஸ்ட்டால் இவ்வளவு அழகான நடையில் எழுத முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் மதன். கையில் எடுத்துப் பிடித்ததிலிருந்து புத்தகத்தைக் கீழே வைக்கக்கூடத் தோணாது படித்துக் கொண்டே இருக்கத் தோணும் எழுத்துநடை. பொதுவாக வரலாற்றுப் பதிவுகளை கொஞ்ச நேரம் மட்டுமே படிக்க முடியும். சற்று நேரத்திலேயே மனச் சோர்வு ஏற்பட்டுவிடும். ஆனால் வந்தார்கள் வென்றார்கள் படிக்கப் படிக்க ஒவ்வொரு ஆட்சிக்காலமும் நம்முன்னே காட்டும் பிரமாண்டம்.நம்மைப் பிரமிக்க வைக்கிறது.இதில் தென்னாட்டு மன்னர்கள் பற்றிய இப்படிப்பட்ட விஸ்தாரமான தகவல்கள் இல்லாமல் போய்விட்டதா அல்லது அவற்றைத் தொகுத்து வழங்க மதனைப் போன்ற எழுத்தாளர்கள் முயற்சிக்கவில்லையா தெரியவில்லை. யாராவது ஒருவர் தென்னாட்டு மன்னர்கள் பற்றியும் இப்படி விரிவாக எடுத்து எழுதுங்களேன். நன்றி மீண்டும் சந்திப்போம்.