Thursday, December 23, 2010

உணர்வுகள்

அனைவருக்கும் வ்ணக்கம்
எனக்கு ஆசைக்கு ஒரு பெண் ஆளுமைக்கு ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் இந்தக் கருத்தை சிலர் ஆட்சேபிக்ககூடும் அதென்ன ஆளுமைக்கு ஆண்தானா? பெண்ணால் ஆளுமை செய்ய முடியாதா?என்று!
உண்மையில் ஆளுமை செய்வது பெண்தான். மேலோட்டமாகப் பார்த்தால் ஆண்மகன்தான் அனைத்தையும் செய்வதுபோலத் தெரிந்தாலும் வழி நடத்தும் கடிவாளம் பெண்ணின் கையில்தான்! நான் சொன்னது காலங்காலமாய் சொல்லிவரும் சொல்வழக்கு அவ்வளவுதான்!
எனது மக்கள் சிறுவர்களாக இருந்தபோது நான் மிகுந்த கண்டிப்போடு நடந்து கொண்ட்துண்டு.அடித்தும் விடுவேன் ஏனெனில் என்னை வளர்த்தமுறை அப்படி.அவர்களுக்கு அந்த வயதுக்குரிய குறும்புகளோ ஆட்டபாட்டங்களோ இருந்ததில்லை.எதையும் வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை இதைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவதுண்டு. "ஏம் பசங்க குறும்பே பண்ணமாட்டாங்க என்னெப் பார்த்தாலே கப்சிப்புனு அடங்கிருவாங்க" என்று நான் பீற்றிக்கொள்ளுவதுண்டு
என் மகனுக்கு இரண்டரை வயதிருக்கும்போது கீழே விழுந்து கையை ஒடித்துக் கொண்டான் பொள்ளாச்சி சென்று வைத்தியம் செய்து கட்டுப் போட்டுவந்தேன் பதினைந்து நாள் கழித்து அவனை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் பொள்ளாச்சிக்கு மருத்துவரிடம் கண்பிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன் என் மடியில் மகன் அமர்ந்துகொண்டு வந்தான் சற்று தூரம் செல்லும்வரை என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டென்று என் முகத்தை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன் அப்பொழுது நான் அடைந்த உணர்வு வார்த்தையால் சொல்ல முடியாது அது நாள்வரையில் மிரட்டுவதும் அடிப்பதும்தான் என்னுடைய அணுகுமுறையாக இருந்ததே தவிர எந்த விதத்திலும் என்னுடைய அன்பையோ அரவணைப்பையோ அவர்களுக்கு நான் அளித்ததில்லை இருந்தும் என் மீது அன்பு செலுத்தும் ஒரு ஜீவன்
பொங்கிவரும் கண்ணீர் பொள்ளாச்சி செல்லும் வரை நிற்கவில்லை அந்தக் கண்ணீருக்கு அர்த்தம் அழுகை என்று சொல்ல முடியாது இனம் புரியாத உணர்வு கண்ணீராய் வடிந்துகொண்டிருந்தது அந்தக்கண்ணீரில் என்னுடைய அகங்காரம் ஆணவம் அனைத்தும் கரைந்துவிட்டிருந்தது நான் கேட்டு அவன் முத்தமிட்டிருந்தால் அது என் உணர்ச்சியை தூண்டியிருக்காது கேட்காமலே கிடைத்த அன்பில் கலங்கிவிட்டேன் அன்றிலிருந்து இன்றுவரை நான் அவர்களை அடித்ததோ திட்டியதோ கிடையாது
எனக்குள்ளே அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எது? முத்தமா?அதனால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியுமா? பையன் முத்தங் கொடுத்தானாம் இவன் மாறிட்டானாம் என்ன கதை விடுறான் பார்? என்று உணர்ச்சியற்ற சிலர் கேலி பேசக்கூடும் மனிதம் என்பதே உணர்ச்சியால் வழிநட்த்தப்படுவதுதானே? இன்பம் துன்பம் ஆசை கோபம் அன்பு வெறுப்பு அழுகை சிரிப்பு பொறாமை இயலாமை என பலவிதமான உணர்ச்சிகள். பலவிதமான மனப்போராட்டங்கள் இவற்றின் வழியில் செல்லும் வாழ்க்கை. இதுதானே மானுடம்?
ஆனால் இன்றோ மேலே சொன்ன அத்த்னை உணர்ச்சிகளையும் விற்றுவிட்டு உறவுகளைக் கொன்றுவிட்டு பணம்பணம் என்று பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன்! ஆறடி மண்ணுக்கு அவ்வளவு பணம் தேவையா?யோசித்துக் கொண்டிருங்கள் பிறகு சந்திப்போம்

Sunday, September 12, 2010

முன் ஜென்மம்

ஒரு மனிதனுக்கு அவ்னுடைய வாழ்வின் முற்பகுதியில் எப்படி வாழ்ந்தானோ அதன் பிரதிபலிப்புதான் பிற்பகுதி வாழ்க்கை அதை விடுத்து முன் ஜென்மம் பின் ஜென்மம் என்பதெல்ல்லாம் கிடையாது என்பது என்னுடைய கருத்து
இளமையில் உடல் திராணியிருந்த காலத்தில் நல்லவனாக, நாலுபேருக்கு உதவுபவனாக இருந்தால் அதன் பலனை பிற்பகுதியில் அனுபவிக்க முடியும் அப்படியில்லாமல் தான்தோன்றித்தனமாக டாஸ்மாக்கில் பகுதிநேரம் பரத்தையர் மடியில் பகுதி நேரம் என்று கழித்துவிட்டு வீட்டுக்கு போனவுடன் மனைவியை அடித்து மகனை மயிரைப் பிடித்து உலுக்கி செய்யாத கூத்தெல்லாம் செய்துவிட்டு மீண்டும் டாஸ்மாக் கடையில் ஐக்கியமாகி விடுவதுமாக இருப்பவனுடைய பிற்பகுதி வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும்
சம்பாதிக்க வேண்டிய நேரத்தில் சம்பாதிக்காமல் கைமுதலையும் வாலிபகாலத்தில் தொலைத்துவிட்டு இளமைக் கொழுப்பெல்லாம் கரைந்தபிறகு மனைவி மக்களின் ஆதரவில்லாமல் பொருளாதாரப் பலமுமில்லாமல் கடைசியில் ஒரு வாட்ச்மேன் வேலை கிடைத்தாலாவது பரவாயில்லை என்று அலையும் நேரத்தில் கூட இந்த நிலைமைக்குக் காரணம் நம்முடைய கடந்தகால விளையாட்டுத்தானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன்ஜென்மத்துப் பாவம் என்று சொன்னால் அது முன்ஜென்மத்துப் பாவம் அல்ல நம் இளமையில் செய்த பாவம்
நம்முடைய பெற்றோரை பாசத்துடன் கணிவோடு கவனித்திருந்தால் மட்டுமே நம் பிள்ளைகள் நம்மைப் பார்க்கும். வயதானவர்களை பெரியவர்களை எப்படி கவனிக்க வேண்டும் எப்படி அவர்களிடம் ப்ண்பாக பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது பாலபாடமாக அவர்கள் மனதில் வேரோடியிருக்கும். நம்மையும் நம் பிள்ளைகள் அன்பாக அரவணைத்துச் செல்லும்.
அவ்வாறில்லாமல் மாமியாரும் மருமகளும் மயிர் பிடித்துக் கொள்வதும் அப்பனும் மகனும் அடித்துக் கொள்வதுமாக இருந்தால் கடைசி நாட்களில் ஓரமாய் ஒதுக்குத் திண்ணையில் கிடக்க வேண்டியதுதான் என்ன அந்தக்காலத்தில் ஒதுக்குத்திண்ணை இந்தக்காலத்தில் முதியோரில்லம் அப்படி ஒதுக்குத்திண்ணையில் கிடக்கும்போது நம்முடைய பெற்றோர் படுத்திருந்த இடம் இதுதானே என்று நினைக்காமல் இதெல்லாம் முன் ஜென்மத்து வினை என்று சொன்னால் அது முன் ஜென்மத்து வினையல்ல இளமையில் செய்த வினை
மீண்டும் சந்திப்போம்












Thursday, September 9, 2010

முதல் அனுபவம்

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்
முதலில் சுயவிபரம் சொல்லிவிடுகிறேன் நித்தியானந்தம் பியூசி ஆங்கிலம் மண்டையில் ஏறாததால் தொடரவில்லை விவசாயம்தான் தொழில் (பிறகென்ன என்னுடைய படிப்புக்கு கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும்?) வேறு பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை சரி மேட்டருக்கு வருகிறேன்
எனக்கு இருபத்தி நாலு வயதில் திருமணம் அழகான பெண் மனைவியாக வாய்த்தாள் (சும்மாவா! ஏழில் குரு இருக்குதப்பா) ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்தது குழந்தை பிறந்து மூன்றாவது நாள் எனது தாத்தாவும் நானும் என் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்றோம் ஜோதிடரின் வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த குடும்பமாக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் அவருடைய இல்லம் தொட்டிக்கட்டு வீடு கோவை மாவட்டத்தில் தொட்டிக்கட்டு வீடு என்றால் சுமார் மூவாயிரம் சதுரடி பரப்பளவில் நான்குபுறமும் ஓடு வேய்ந்து நடுவில் தொட்டி அமைத்து அதில் விழும் மழைநீரை குழாய் மூலமாக வெளிவாசலில் கொண்டுபோய் விட்டிருப்பார்கள் மற்ற மாவட்டங்களில் என்ன பெயரோ தெரியாது இங்கே தொட்டிக்கட்டு வீடு
தாத்தாவுக்கு ந்ன்கு பரிச்சியமானவர் என்பதால் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கொள்ளுப்பேத்தி பிற்ந்திருப்பதாகச் சொல்லவும் நேரத்தைக் கேட்டார் சொன்னேன் "ம்..ரோஹிணி நட்சத்திரம் பூமி வாங்குவாள்"என்றார் இவரது நேரமே சரியில்லாமலிருக்கும் போல இருக்கே இவர் என் மகளுக்கு நேரம் பார்த்துச் சொல்கிறாரா?என்று கிண்டலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அருகிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன் ராசிக்கட்டம் அம்சம் மற்றும் பல கண்க்குகளைப் போட்டுவிட்டு நிமிர்ந்தார் "உங்க பேத்தீது அருமையான ஜாதகம்ங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கும்ங்க ஆராய்ச்சிக்கெல்லாம் போகுமுங்க"என்றார் "பொட்டப்புள்ளெ போய் எனத்த ஆராய்ச்சி ப்ண்ணுது மேல சொல்லுங்க"என்றார் தாத்தா
ஜோதிடர் கேட்டார் "இந்த மூணுநாள்லெ ஏதாச்சும் பூமி வாங்கியிருக்கிறீங்களா?"
"இல்லீங்களே"இது தாத்தா
"ஏண்டா நீயோ உங்கப்பனோ ஏதாச்சும் பேசினீங்களோ?"என்னைப் பார்த்து தாத்தா கேட்டார்
"இல்லீங்கையா நாங்க ஒண்ணும் பேசலீங்களே"என்று நான் சொன்னேன்
(கொங்குநாட்டு மக்கள் பெரும்பாலும் தாத்தாவை ஐயா என்றுதான் சொல்லுவோம்)
"இந்தப் பொண்ணு பொற்ந்து இத்தனை நாழிகையிலெ பூமி அமைஞ்சிருக்கணும் நீங்க ஊர் போய் பாருங்க நான் இந்த ஜாதகத்தை எழுதி வச்சிருக்கேன்" என்று சொல்லி அனுப்பினார்

நாங்கள் வீடு வந்து சேர்ந்ததும் அப்பா சொன்னார் "பெரியப்பா மகன் வந்திருந்தான் தெக்கால தோட்டத்தெ வித்துப்போடலாம்னு நெனைக்கறேன் நீயே வச்சுக்கண்ணான்னு சொன்னான் சரி வச்சுக்கறேன் வெலயச்சொல்லுன்னு சொன்னேன் உங்கிட்ட நான் எப்பிடி வெலெ சொல்லறது நீயே ஒரு வெலெயப் போட்டு வச்சுக்கன்னு சொல்லிட்டுப் போறான்"

இதைக் கேட்டதும் மலைத்துப் போய் நின்று விட்டேன் இது சாத்தியம்தானா? எப்படி அவ்வள்வு துல்லியமாகச் சொல்ல முடிந்தது? இருபத்தி நான்கு வருடத்திற்க்கு முன்பு செல்போனா இருந்தது? ட்டோய் ட்டொய் என்று பத்து நெம்பரைத் தட்டி என்னோட அப்பாவைக் கூப்பிட்டு "என்ன்ப்பா உங்க மகன் ஜோசியம் பார்க்க வந்திருக்கு என்ன சொல்லி அனுப்பறது"என்று கேட்டுக் கொண்டு சொல்வதற்கு. எல்லாமே கணக்குத்தானே

என்னுடைய ஒன்றுவிட்ட சகோதிரர் ஒருவர் ஜோதிடத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர் நாங்கள் பார்த்த ஜோதிடரைப் பற்றியும் தெரிந்தவர் அவரிடம் அந்த ஜோதிடரைப் பற்றிக் கேட்டேன் ஜோதிடத்தில் அவர் பெரிய மேதை ஆனால் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்கமுடியவில்லை என்று சொன்னார் அன்றிலிருந்துதான் நான் ஜோதிடத்தை நம்ப ஆரம்பித்தேன் இப்போது எனது மகள் எம்.எஸ்.சி ஜீன் டெக்னாலஜி முடித்துவிட்டு பி.எச்.டி படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள் மீண்டும் சந்திப்போம்