Thursday, December 23, 2010

உணர்வுகள்

அனைவருக்கும் வ்ணக்கம்
எனக்கு ஆசைக்கு ஒரு பெண் ஆளுமைக்கு ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் இந்தக் கருத்தை சிலர் ஆட்சேபிக்ககூடும் அதென்ன ஆளுமைக்கு ஆண்தானா? பெண்ணால் ஆளுமை செய்ய முடியாதா?என்று!
உண்மையில் ஆளுமை செய்வது பெண்தான். மேலோட்டமாகப் பார்த்தால் ஆண்மகன்தான் அனைத்தையும் செய்வதுபோலத் தெரிந்தாலும் வழி நடத்தும் கடிவாளம் பெண்ணின் கையில்தான்! நான் சொன்னது காலங்காலமாய் சொல்லிவரும் சொல்வழக்கு அவ்வளவுதான்!
எனது மக்கள் சிறுவர்களாக இருந்தபோது நான் மிகுந்த கண்டிப்போடு நடந்து கொண்ட்துண்டு.அடித்தும் விடுவேன் ஏனெனில் என்னை வளர்த்தமுறை அப்படி.அவர்களுக்கு அந்த வயதுக்குரிய குறும்புகளோ ஆட்டபாட்டங்களோ இருந்ததில்லை.எதையும் வேண்டும் என்று அடம்பிடித்ததில்லை இதைப் பற்றி நான் பெருமையாகப் பேசுவதுண்டு. "ஏம் பசங்க குறும்பே பண்ணமாட்டாங்க என்னெப் பார்த்தாலே கப்சிப்புனு அடங்கிருவாங்க" என்று நான் பீற்றிக்கொள்ளுவதுண்டு
என் மகனுக்கு இரண்டரை வயதிருக்கும்போது கீழே விழுந்து கையை ஒடித்துக் கொண்டான் பொள்ளாச்சி சென்று வைத்தியம் செய்து கட்டுப் போட்டுவந்தேன் பதினைந்து நாள் கழித்து அவனை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் பொள்ளாச்சிக்கு மருத்துவரிடம் கண்பிப்பதற்காக சென்று கொண்டிருந்தேன் என் மடியில் மகன் அமர்ந்துகொண்டு வந்தான் சற்று தூரம் செல்லும்வரை என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டென்று என் முகத்தை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான்
ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன் அப்பொழுது நான் அடைந்த உணர்வு வார்த்தையால் சொல்ல முடியாது அது நாள்வரையில் மிரட்டுவதும் அடிப்பதும்தான் என்னுடைய அணுகுமுறையாக இருந்ததே தவிர எந்த விதத்திலும் என்னுடைய அன்பையோ அரவணைப்பையோ அவர்களுக்கு நான் அளித்ததில்லை இருந்தும் என் மீது அன்பு செலுத்தும் ஒரு ஜீவன்
பொங்கிவரும் கண்ணீர் பொள்ளாச்சி செல்லும் வரை நிற்கவில்லை அந்தக் கண்ணீருக்கு அர்த்தம் அழுகை என்று சொல்ல முடியாது இனம் புரியாத உணர்வு கண்ணீராய் வடிந்துகொண்டிருந்தது அந்தக்கண்ணீரில் என்னுடைய அகங்காரம் ஆணவம் அனைத்தும் கரைந்துவிட்டிருந்தது நான் கேட்டு அவன் முத்தமிட்டிருந்தால் அது என் உணர்ச்சியை தூண்டியிருக்காது கேட்காமலே கிடைத்த அன்பில் கலங்கிவிட்டேன் அன்றிலிருந்து இன்றுவரை நான் அவர்களை அடித்ததோ திட்டியதோ கிடையாது
எனக்குள்ளே அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது எது? முத்தமா?அதனால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவரமுடியுமா? பையன் முத்தங் கொடுத்தானாம் இவன் மாறிட்டானாம் என்ன கதை விடுறான் பார்? என்று உணர்ச்சியற்ற சிலர் கேலி பேசக்கூடும் மனிதம் என்பதே உணர்ச்சியால் வழிநட்த்தப்படுவதுதானே? இன்பம் துன்பம் ஆசை கோபம் அன்பு வெறுப்பு அழுகை சிரிப்பு பொறாமை இயலாமை என பலவிதமான உணர்ச்சிகள். பலவிதமான மனப்போராட்டங்கள் இவற்றின் வழியில் செல்லும் வாழ்க்கை. இதுதானே மானுடம்?
ஆனால் இன்றோ மேலே சொன்ன அத்த்னை உணர்ச்சிகளையும் விற்றுவிட்டு உறவுகளைக் கொன்றுவிட்டு பணம்பணம் என்று பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான் மனிதன்! ஆறடி மண்ணுக்கு அவ்வளவு பணம் தேவையா?யோசித்துக் கொண்டிருங்கள் பிறகு சந்திப்போம்